
தர்மபுரி செயின்ட் பீட்டர்ஸ் தேவாலயத்தின் பாதரியார் தாமஸ், தனியாக தன் அறையில் அமர்ந்து கொண்டு ஒரு புத்தகம் படித்துக் கொண்டிருந்தார்; அன்றைய மாலை பிரார்த்தனை முடிந்திருந்தது. அடர்த்தியான கரிய தாடி, சற்றே தடியான மூக்குக்கண்ணாடி, சில இடங்களில் சிரிக்கும் கிராப், மாநிறம், நல்ல உயரம், சற்றே மெலிந்த தேகம் முட்டி வரையில் வெள்ளை கோட் அணிந்திருந்த அவரைப் பார்த்தால் முப்பதிலிருந்து முப்பத்தைந்து வயதுக்குள் தான் இருப்பார் என எவரும் யூகிக்கமுடியும் கிறுத்துவ மதத்தில் நல்ல பற்று கொண்ட அவர் தனது பணிகளால் சிறு வயதிலேயே தமிழகத்தில் நன்கு மதிக்கப்படும் ஒரு பாதிரியராய் இருந்தார். ஒரு முறை இந்திய அளவில் வாடிக்கனுக்கு செல்ல தேர்ந்தெடுக்கப்பட்டு சென்று வந்திருக்கிறார்.
அவர் அறைக்கு பீட்டர் என்ற அத்தேவாலயத்தில் பணிபுரியும் ஊழியன் வந்து "ஃபாதர், வெளிய ஒரு பெரியவர் பாவமன்னிப்பு கேக்கணும்னு சொல்லிட்டு வந்திருக்காரு, நேரம் முடிஞ்சிடுச்சு நாளைக்கு வாங்கன்னு சொல்லிடட்டா?" என்றான். அதற்க்கு தாமஸ் "இல்லை பீட்டர், தாரளமா வரச் சொல்லு இன்னும் அஞ்சு நிமிஷத்துல நான் வந்துடறேன்" என்று கூறினார். பீட்டர் உடனே அவரை அழைத்து வர சென்றான் . தேவாலயத்திற்கு பலர் பாவமன்னிப்பிற்காக வருவது உண்டு. இவ்வாறு வருபவர்களின் பாவச்சுமையை இறக்கி வைக்க உதவுவதை தனது முக்கியக் கடமையாக தாமஸ் செய்து வந்தார். அத்தேவாலயத்தில் பாவமன்னிப்பின் பொழுது பாதரியார் அமர்வதற்காக ஒரு நாற்காலி வைக்கப்பட்டிருக்கும் ஒரு மிகச் சிறிய அறை இருந்தது. அறையின் ஒரு புறம் மடும் சுவரில்லாமல் வலை போன்ற ஒரு அமைப்பும் அதை ஒட்டியபடி ஒரு மெல்லிய வெள்ளை துணியும் இருந்தது. அதனை ஒட்டியபடி பாவமன்னிப்பு கேட்போருக்கான அறை இருந்தது. பாவமன்னிப்பு கேட்போரை பாதரியார் பார்க்கக்கூடாது என்ற வழக்கம் கிறுத்துவ மதத்தில் உண்டு, இதற்காகவே அந்த மெல்லிய வெள்ளைத் துணி இரு அறைகளின் இடையே வைக்கப்பட்டிருந்தது. தாமஸ் வரும் வரையில் அந்த பெரியவர் அழுதபடியே காத்திருந்தார். காத்திருக்கும் ஒவ்வொரு கணமும் அவர் மனத்தின் பாரம் அதிகரித்துக்கொண்டே இருந்தது. அவருக்கு கிட்டதட்ட அறுபது வயதிருந்திருக்கும், வெள்ளை வேட்டி, நீல நிற சட்டை அதன் மேல் மஞ்சள் நிற ஸ்வெட்டர் ஒன்று அணிந்திந்தும் அவர் உடல் முழுவதும் நடுங்கிக்கொண்டிருந்தது.
தாமஸ் பாவமன்னிபின் போது, பாதரியார் அமரும் சிறிய அறையில் இருந்த மர நாற்காலியில் அமர்ந்து அங்கிருந்த பல்ப் ஒன்றை எரியவிட்டார். அதை கண்டதும் பெரியவர் தன் கைகளைக் கூப்பியபடியே அந்தச் சிறிய அறையை நோக்கி வேகமாக வந்தார். அவ்வெள்ளை துணியில், தாமஸ் அமர்ந்திருப்பதின் நிழல் மட்டும் அவருக்கு தெரிந்தது. பெரியவர் வெள்ளைத் துணியை அடைந்தவுடன் அருகே முட்டியிட்டு தனது இரு கரங்களை இறுக்க கூப்பியபடியே "ஃபாதர் ஐயா, ஃபாதர் ஐயா..." என்று கூறிவிட்டு எவ்வளவு முயன்றும் தன் அழுகையை கட்டுப்படுத்த முடியாமல் ஓர் சிறு குழந்தையைப் போல அழத்தொடங்கினார். தாமஸ் "அழாதே மகனே, உன்னை நீயே கட்டுப்படுத்திக்கொள், தைரியமாக நீ சொல்ல வந்ததை சொல்" என்றார். பெரியவர் சிறிது நேரம் கழித்து "ஃபாதர், நான் ரொம்ப பெரிய தப்பு பண்ணிட்டேன் ஃபாதர், என்னை அந்த கடவுள் சத்தியமா மன்னிக்கவே மாட்டார்" என்றார். அதற்கு தாமஸ் "இறைவன் உன்னை நிச்சயம் மன்னிப்பார், நீ அவருடைய மகனைப் போன்றவன், எந்த தந்தையோ தன் மகனுக்கு தீங்கு விளைவிப்பாரா?" என்று கேட்டார். இதைக் கேட்டவுடன் அந்தப் பெரியவரின் அழுகை இன்னும் அதிகரித்துவிட்டது. "இந்தப் பாவி பண்ணியிருக்கனே ஃபாதர், என் சொந்த புள்ளைக்கு நான் எவ்வளவோ கொடுமை பண்ணியிருக்கனே ஃபாதர். என்னை மாதிரி ஒரு மோசமான அப்பாவுக்கு எப்படி ஃபாதர் மன்னிப்பு?.." என்று கூறினார்.
தாமஸ் அதற்கு " சற்று விளக்கமாக கூறு மகனே" என்றார். பெரியவர் "சொல்றேன் ஃபாதர், இருபது வருஷம் முன்னாடி நான் குன்னூர்ல ஒரு பேங்க்ல வேலை செஞ்சிக்கிட்டிருந்தேன். என்னுடையது ரொம்ப சந்தோஷமான ஒரு குடும்பம், நான் என் பொண்டாட்டி அப்புறம் எங்களுக்கு ஒரே மகன், ராஜான்னு பேரு. என் மகன் அங்கேயே ஒரு ஸ்கூல்ல படிச்சிக்கிட்டிருந்தான் நான் எப்போவுமே அவன் நல்ல பெரியாளா வரனும்னு கொஞ்ச ரொம்பவே கண்டிப்பாத்தான் இருப்பேன். எனக்கு ரொம்ப பயப்படுவான், பரிட்சைல கம்மி மார்க் எல்லாம் வாங்கனான்ன என்னால பொறுத்துக்கவே முடியாது. பெல்ட்டால அவனை அடி அடின்னு மாட்டப் போட்டு அடிக்கிற மாதிரி அடிச்சுடுவேன், என் பொண்டாட்டி என்னை எவ்வளவோ தடுக்கப் பாப்பா, ஆனா அவளை தள்ளிட்டு அவனை அடிப்பேன். இதெல்லாம் நான் அவன் பெரிய ஆளா வரணும்னு தான் செஞ்சேன் அவனும் ஒரு அளவுக்கு நல்லாவே படிச்சிக்கிட்டிருந்தான்." "ஒரு நாள் கோயமுத்தூர் பேங்க்ல கொஞ்சம் பணம் கொண்டு போய் சேக்கிற வேலை இருந்தது. அன்னிக்கு நல்ல மழை பேஞ்சிக்கிட்டிருந்ததால மலை இறங்கிறது ஆபத்துன்னு சொல்லிக்கிட்டு, பணத்தை அடுத்த நாள் காலைல கொண்டு போயிடலாம்னு வீட்டுக்கு கொண்டு வந்து வெச்சிட்டேன். அன்னிக்கு வீட்டுக்கு என் மச்சானும் அவங்க குடும்பமும் வந்திருந்தாங்க. நைட் எல்லாரும் சாப்பிட்டுக்கிட்டிருந்தபோது என் பொண்டாட்டி என் கிட்ட 'ஏங்க நம்ப ராஜா க்ளாஸ்ல எல்லாரையும் டில்லி, ஆக்ரான்னு டூர் கூட்டிக்கிட்டு போறாங்களாம், அவனும் போவணும்னு ஆசைபடறான், அதுக்கு ஆயிரம் ரூபா குடுக்கணுமாம்...' என்றாள். அதுக்கு நான் 'டூரும் வேணாம் ஒரு கன்றாவியும் வேணாம். ஒக்காந்து படிடா ராஸ்கல், அவனவன் நல்லா படிச்சிட்டே க்யூல நிக்கிறான் வேலைக்கு, துரை படிக்கிற படிப்புக்கு நம்ப ஊர்லேயே கைடாத்தான் போவணும்' என்று சொல்லிட்டு சொந்தக்காரங்க முன்னாடியே அவனை கன்னா பின்னான்னு திட்டிட்டேன். அதுக்கு என் மகன் 'அம்மா, அப்பாவுக்கு என்னை புடிக்கவேயில்லைம்மா, என்னை ஏதோ ஹாஸ்டல்ல சேத்துருங்க' என்றான். அதுதான் அவன் முதன்முறை இப்படி பேசினது. எனக்கு ரொம்ப கோவம் வந்துருச்சு. என் சொந்தகாரங்க முன்னாடி அவன் இப்படி பேசனதை தாங்க முடியாம அவன் தட்டை கீழ தள்ளிட்டு 'முதல்ல மரியாதையா நடந்துக்க கத்துக்க, இன்னிக்கு உனக்கு சோறு கிடையாது' என்றெல்லாம் சொல்லிட்டேன். அவன் அழுதுக்கிட்டே ரூமுக்கு ஓடிட்டான்."
"அடுத்த நாள் காலை ரெடியாயிட்டு, புறப்படலாம்னும்போது பாத்தா பணத்தைக் காணலை. வீடு முழுக்கத் தேடியும் கிடைக்கவேயில்லை. எனக்கு ஒண்ணுமே புரியலை, அது ரொம்பவே முக்கியமா கொண்டு போய் சேர்க்க வேண்டியிருந்தது. ஒக்காந்து யோசிச்சபோது என் பையன் அதுக்கு முன்னாடி நாள் பணம் கேட்டதும் என்னை எதிர்த்துப் பேசினதும் தான் ஞாபகம் வந்தது. அப்போ அவன் ஸ்கூலுக்குப் போயிருந்தான். நேரா அவனை பாக்க ஸ்கூலுக்கே போயிட்டேன். அவன் க்ளாஸிலிருந்து அவனை வெளியே கூப்பிட்டு அதைப்பத்தி கேட்டதுக்கு அவன் எடுக்கலைன்னு சொன்னான். என்னாலை வேற ஒன்னும் யோசிக்க முடியலை. அவன் மேல இருந்த கோபம், என்னோட டென்ஷன் எல்லாம் சேர்ந்து என்னை மூர்க்கனாக்கியிடுச்சு, அவனை அடி அடின்னு அங்கேயே அடிச்சிட்டேன். அவன் அங்கிருந்த செவுத்துல இடிச்சு ஏதோ குத்தி நெத்தியிலிருந்து ரத்தம் எல்லாம் வந்து மயக்கம் போட்டுட்டான். அவன் டீச்சர் வந்து என்னைத் தடுக்கலைன்னா அவனை அங்கேயே கொன்னுருப்பேன்னு நினைக்கிறேன்" என்று கூறி மீண்டும் அழ ஆரம்பித்தார்
தன்னை தானே தேர்த்திக் கொண்டு "பையனை ஆஸ்பத்திரிக்கு கூட்டுபோயிட்டு பின்ன வீட்ல விட்டேன், பெரிசா ஒண்ணும் ஆவலைன்னு சொல்லிட்டு நெத்தியில மட்டும் தையல் போட்டாங்க. காசெல்லாம் சேத்து எப்படியோ பணத்தை தேத்தி அன்னிக்கு சாயங்காலமே பேங்க்ல போய் சேத்துட்டேன். தாமதத்தால என்னை பேங்க்ல திட்டு திட்டுன்னு திட்டுனாங்க. ரொம்ப எரிச்சலா வீட்டுக்கு திரும்ப வந்தா பொண்டாட்டி வீட்டுக்கு வெளியே ஒக்காந்து அழுதுக்குட்டிருந்தா விசாரிச்சப்போ பையனை மதியத்திலிருந்து வீட்ல காணவே காணம், எங்கெங்கேயோ தேடியும் கிடைக்கலைன்னு சொன்னா. அப்பவும் ஒரு முட்டாளாட்டம் 'எங்க போக முடியும், வந்திருவான், வரலைன்னாலும் பரவாயில்லைன்னு' சொல்லிட்டுப் போயிட்டேன். ராத்திரிக்கூட வரலை. அப்போதுதான் பயமே வந்துச்சு, போய் எங்கெங்கேயோ தேடினேன் கிடைக்கலை, பேப்பர்ல டி.வி ல எல்லாம் கூட போட்டாவெல்லாம் போட்டோம், ஒண்ணும் பயனேயில்லை. என்னை சுத்தியிருக்கவங்க எல்லாம் என்னை திட்டு திட்டுன்னு திட்னாங்க. நான் மாத்தல் வாங்கிட்டு இந்த ஊருக்கு வந்துட்டேன். என் பொண்டாட்டி அழுது அழுதே தன் வாழ்க்கைய கரைச்சு பத்து வருஷம் முன்னாடி செத்துட்டா. தனியா நடந்ததை எல்லாம் நினைச்சுக்கிட்டு வாழ்ந்துக்குட்டு வந்தேன். போன வாரம் மச்சான் சாவற நிலைமைல இருக்கார்னு அவரைப் பாக்கப் போயிருந்தேன். அங்க என் மச்சான் என் கிட்ட ஏதோ தனியா சொல்லனும்னு சொன்னாரு, கேட்டா "மாப்பிள்ளை, என்னை மன்னிச்சிடு நான் உனக்கு ரொம்பப் பெரிய துரோகம் பண்ணிட்டேன்னு" சொன்னார். என்னய்யா சொல்றேன்னு கேட்டா 'இருவது வருஷம் முன்னாடி உன் வீட்ல பணம் எடுத்தது நாந்தான்னு' சொன்னான்" மீண்டும் அழுதார்.
"என்ன பண்ண முடியும்? சாவப்போறவனை அடிச்சு கொலை பண்ணவா முடியும்? அவனை ஏதோ பண்ணாத்தான் என் பையன் கிடைச்சிடுவானா? எனக்கு அவன் மேல வந்த கோவத்தை விட என் மேலதான் கோவம் வந்துச்சு. என்னை மாதிரி ஒரு மிருகத்தை மன்னிக்கவே முடியாது. நான் ஒரு பாவி ஃபாதர், பாவி" என்று கூறி தன்னைத் தானே அடித்துக்கொண்டே கத்தி அழத் தொடங்கினார். தாமஸ் அவரிடம் "கலங்காதே மகனே, இது இறைவனின் சபை, உனக்கு நிச்சயம் மன்னிப்பு உண்டு" என்று கூறினார். பெரியவர் தன்னைத் தானே தேத்திக் கொண்டார். "இன்றிலிருந்து நீ உன் அனைத்து பாவங்களிலிருந்து பாவ விமோசனம் பெற்று விட்டாய். உன் வாழ்கையை குற்ற உணர்வு இல்லாமல் கழி, இறைவன் உன்னை ரட்சிப்பார்" என்றார். பெரியவர் அழுதுக்கொண்டே "கடவுளே என்னை மன்னிச்சாலும் என் பையன் என்னை மன்னிக்கமாட்டான் ஃபாதர்" என்று கூறியபடி தன் கண்ணீரைத் துடைத்துவிட்டு வெளியேறினார். பீட்டர் சிறிது நேரம் கழித்து தாமஸின் அரைக்கு வந்தான். "ஃபாதர் நான் கிளம்பட்டுமா?" என்று கேட்டான். அப்போழுது நெற்றியிலிருந்த தழும்பைத் தடவியபடியே அழுது கொண்டிருந்தார். தன் தந்தையை 'மகனே' என்று அழைத்து, தன் தந்தை தன்னை 'ஃபாதர்' என அழைத்ததை கேட்ட தாமஸாக மாறியிருந்த ராஜா.
